தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களை தொன்மைக்கு ஏற்ப பிரித்து சீரமைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேல் - அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை வருமானங்களின் அடிப்படையில் அறநிலையத்துறை பிரித்து நிர்வாகம் செய்வது அபாயகரமானது என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

பொன்மாணிக்கவேல்
ponmanikkavel

By

Published : Jul 20, 2023, 12:14 PM IST

கும்பகோணம்:சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களை வருமானங்களின் அடிப்படையில் அறநிலையத்துறை பிரித்து நிர்வாகம் செய்வது அபாயகரமானது. எனவே, இதனை கைவிட வேண்டும்.

இதற்கு மாறாக இக்கோயில்களை அதன் தொன்மைக்கு ஏற்ப பல பிரிவுகளாக பிரித்து சீரமைப்பதில் முக்கியத்துவம் அளித்து திட்டமிட்டால், இன்றும் 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் இவற்றை முழுமையாக சீரமைக்கலாம். தற்போது திருக்கோயில் நிர்வாகம் கார்ப்பரேட் நிறுவனம் போன்று இயங்குவதால், அதன் வருமானத்தை எப்படி பெருக்குவது என்ற நோக்கமே பிரதானமாக உள்ளது.

மேலும், பல நூறு ஆண்டுகள் பழமையான கோயில்களை நம் பொக்கிஷமாக கருதி, இதனை பாதுகாத்து இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் வருங்காலத்தில் பல தலைமுறை சந்ததியினருக்கு இதன் மதிப்பும், பெருமையும் அறிந்து கொள்ளும் வகையில் இவற்றை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

மேலும், தற்போது பந்தாவுக்காகவும், ஊழல் செய்யவும் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து வருமானத்தை பெருக்குவதையே குறிக்கோளாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் கோயில்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என கூறினார்.

இதே போல், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பொன் மாணிக்கவேல், "தமிழ்நாட்டில் எந்தெந்த தொன்மை வாய்ந்த கோயில்களை அரசால் பராமரிக்க முடியவில்லையோ, அவற்றை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன 10இல் ஒரு மடங்கு சிலைதான் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 165 தொன்மை வாய்ந்த கோயில்கள் பராமரிக்க முடியாமல் அழியுற்ற நிலையில் உள்ளது. இந்த கோயில்கள் அனைத்தும் 600இல் இருந்து 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனால், அவற்றை அரசு பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தலுக்கு முன்பு ஜனநாயக வாதியாக உள்ள அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சர்வாதிகாரிகளாக மாறுகின்றனர். தமிழ்நாட்டில் முழுவதும் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறையில் சாட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பொய் சாட்சிகளை நம்பி காவல்துறை செயல்படுகிறது.

எனது ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு ஏற்பதில்லை. ஆலோசனை கேட்கும் அதிகாரிகளும் தற்போது கிடையாது. அவர்கள் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தற்போது அனைவரும் தெய்வ விக்கிரகங்களை மட்டுமே பொக்கிஷங்களாக பார்க்கின்றனர். ஆனால், அது தவறான ஒன்று. அங்கு உள்ள கல்வெட்டுக்கள் அனைத்துமே பொக்கிஷங்கள்தான். இவைகள்தான் நமக்கு அடையாளம் கொடுக்கிறதே தவிற, அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ அடையாளம் கொடுப்பது கிடையாது” என்றார்.

இதையும் படிங்க:Manipur Violence: பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details