தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர், மணஞ்சேரி பகுதியில் சிலர் சட்ட விரோதமாகக் கைத்துப்பாக்கி வைத்துக் கொண்டு பலரை மிரட்டி வருவதாக, திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின், திருச்சி மண்டல துணை காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில், 10 பேர் கொண்ட தனிப்படையினர், கடந்த 6-ஆம் தேதி, கள்ளப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணஞ்சேரி மற்றும் கள்ளப்புலியூர் கிராமங்களில் தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தென்றல் (35) என்பவரை போலீசார் கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தும் குண்டுகளையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக, போலீசார் கள்ளபுலியூர் மற்றும் மணஞ்சேரி பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில், அப்பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் மறைத்து வைத்திருந்த இரு கைத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
கள்ளப்புலியூர் பகுதியில், கடந்த இரு நாட்களில், அடுத்தடுத்து சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த 3 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைத்துப்பாக்கி எப்படி இவர்களுக்கு வந்தது? துப்பாக்கியை வைத்து இதுவரை யார் யாரை மிரட்டியுள்ளனர்? இது யாருக்குச் சொந்தமானது? யாரையாவது கொலை செய்யத் திட்டுமிட்டு கைத்துப்பாக்கியைப் பதுக்கி வைத்திருந்தனரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.