தஞ்சாவூர்:கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ‘பெனிபிட் பண்ட்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தன. இந்த நிதி நிறுவன ஊழியர்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி பல கோடி ரூபாய் முதலீடு செய்ய வைத்தனர். பின்னர், முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல் மோசடி செய்துவிட்டு, நிதி நிறுவனத்தை இழுத்து பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். பணம் கொடுத்து ஏமாந்த வாடிக்கையாளர்கள் இது குறித்து தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல் துறையினர் தலைமறைவாக இருந்த தனியார் பெனிபிட் பண்ட் நிர்வாகிகள் ராமநாதன் (55), ராஜேஸ் (45) ஆகிய இரண்டு பேரை கடந்த மே 5 ஆம் தேதி கைது செய்தனர். மேலும், இந்த மோசடியில் தொடர்பு உள்ளவர்களையும் தேடி வந்தனர். திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.
ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சாவூர் உள்பட 10 இடங்களில் செயல்பட்டு இருந்துள்ளது. அதிக வட்டி தருவதாக இந்த நிறுவனத்தினர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி, நூற்றுக்கணக்கானோர் பல கோடி ரூபாய் இதில் முதலீடு செய்தனர். இந்நிலையில், பணத்தை திரும்பக் கேட்ட வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனம் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.