கும்பகோணம்:எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதை விரைவில் நிரூபிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். ஆனால், இடையில் அவரது தாயார் மறைவைத் தொடர்ந்து தேனியில் இருந்த ஓபிஎஸ் கடந்த வாரம் சென்னை திரும்பி மீண்டும் கட்சிப் பணியை தொடர்ந்து வருகிறார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் அடுத்தடுத்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது மக்கள் மன்றம், நீதிமன்றம் இரண்டிலும் தங்களது தரப்பிற்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டம் ஓயப்போவதில்லை என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதோடு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தான் கூறியதை போலவே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டும் பணியை தொடங்கியுள்ளார். அந்த வகையில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துக்கொள்ள கும்பகோணம் சென்ற அவருக்கு திங்கட்கிழமையன்று ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு எதிரே உள்ள ராயா கிராண்ட் என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்கினார்.