தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் மனோரா கோட்டை உள்ளது. இது 1815 ஆம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் நெப்போலியனின் பிரெஞ்சு படையை வாட்டர்லூ போரில் தோற்கடித்தது. இதன் வெற்றிச் சின்னமாகத்தான் இக்கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது என்று வரலாற்றுச் சான்று கூறுகிறது. இந்த கோட்டை எட்டு அடுக்குகளைக் கொண்டு என்முக வடிவத்தில் 23 மீட்டர் உயரத்தில் இந்த கோபுர அமைப்பு வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
இந்தக் கோட்டையை சுற்றிலும் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோட்டையை சுற்றிலும் சிறுசிறு அறைகள், படைவீரர்கள் தங்குவதற்கென அமைக்கப்பட்டுள்ளன. மினா ரெட் என்னும் சொல்லில் இருந்தே மனோரா என்ற இந்த கோட்டை பெயர் பிறந்துள்ளது என்று கூறப்படுகிறது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின்போது, இந்த கோட்டை சேதமடைந்த நிலையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இதில் பயணிகள் ஓய்வு கூடம், குழந்தைகள் பூங்கா போன்றவையும் இந்த கோட்டை பகுதியில் உருவாக்கப்பட்டன. இந்த கோட்டையின் உச்சியிலிருந்து இலங்கையை பார்க்க முடியும் என்றும் இக்கோட்டைப் பகுதி கப்பல் துறைமுகமாக பயன்பட்டது என்றும் கூறப்படுகிறது.