தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.16) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை வகித்தார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "நாடாளுமன்றத்தில் இந்தியாவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், எம்பிக்கள் என அனைவரும் கூடும் இடம். அங்குச் சரியான பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமை. அதேபோல் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும் மத்திய அரசின் கடமை ஆகும்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் எம்பிக்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சென்னையில் பேரிடர் தொடர்பாகத் தமிழ்நாட்டிற்கு அரசாங்கம் கோரிய நிதியை மத்திய அரசு கொடுத்து உதவிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றார்.
காவிரி ஆறு என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை, மக்களின் பிரதிநிதிகளாக எல்லா அரசியல் கட்சிகளும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். அது சட்டத்துக்குப் புறம்பானது என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் போராடுவது அவர்களது அடிப்படை உரிமை" என தெரிவித்தார்.