தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய திருநர் தினம்: 1 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்.. காவலராக போராடி வரும் தஞ்சை யாழினி! - Transgender Yazhini

தஞ்சாவூரைச் சேர்ந்த திருநங்கை யாழினி, காவல் துறையில் பணிபுரிவதற்கு சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரசு வேலை வாய்ப்பில் தங்களுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய திருநர் தினம்: 1 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்.. காவலராக போராடி வரும் தஞ்சை யாழினி
தேசிய திருநர் தினம்: 1 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்.. காவலராக போராடி வரும் தஞ்சை யாழினி

By

Published : Apr 15, 2023, 4:02 PM IST

தஞ்சாவூரைச் சேர்ந்த திருநங்கை யாழினி அளித்த சிறப்பு பேட்டி

தஞ்சாவூர்: தேசிய திருநர் தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, உம்பளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருநங்கையான யாழினி, சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். இளநிலை பொறியியல் மெக்கானிக் படித்துள்ள யாழினியின் தாயார், தனது சொந்த ஊரில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தஞ்சையை அடுத்த மானோஜிபட்டியில், சக திருநங்கைகளுடன் யாழினி வசித்து வருகிறார்.

இதனிடையே கடந்த 2020 - 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்த யாழினி, 2020ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவரது உயரம் 158.5 சென்டி மீட்டர் இருந்ததால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த யாழினி, இடைக்கால உத்தரவு பெற்று, மீண்டும் 2021 செப்டம்பரில் திருச்சியில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டு, அதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும், இதுவரை அவருடைய மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் யாழினி தெரிவிக்கிறார்.

மேலும் இது குறித்து யாழினி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தேசிய திருநர் தினத்தில், அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனது லட்சியமே காவலர் ஆவதுதான். எனது கனவு அது மட்டுமே. இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக போராடி வருகிறேன். புத்தகங்கள் வாங்கக்கூட காசு இல்லாமல், எனது நண்பர்கள் வாங்கிக் கொடுத்த புத்தகங்களைப் பெற்று, காவலர் வேலைக்கு படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று போராடினேன்.

எங்களுடைய முக்கிய கோரிக்கை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கை - திருநம்பி மக்களுக்கான தனி இட ஒதுக்கீடு 1 சதவீதம் வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் படித்த திருநங்கைகள், திருநம்பிகள் அதிகம் பேர் உள்ளனர். பக்கத்து மாநிலமான கர்நாடக அரசு, திருநங்கைகள், திருநம்பிகளுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உள்ளனர். தமிழ்நாடு, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.

இலவச அடையாள அட்டை, மாத உதவித் தொகை ஆகியவை வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் அடிப்படை தேவையான கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான், எங்களது முக்கியமான நீண்ட கால கோரிக்கை. அவை நிறைவேற்றப்பட்டால் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் அவசியம் இருக்காது. பெற்றோர்கள் சமூக ஏற்பு என்ற நிலை ஏற்படும். சமூக ஏற்பு என்பது அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டும்.

1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே, தீர்வு ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெற்று, நாங்கள் முன்னேற முடியும். பெற்றோர்களும் தங்களை ஏற்றுக் கொள்வார்கள். திருநங்கை, திருநம்பி மக்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு சட்டப் போராட்டத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த குரூப் 4 தேர்வில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தேர்வு எழுதி, அதில் 15 பேர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இதுவரை எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.

எங்களுடைய திருநங்கைகள் என்ற பாலினத்தை பெண்கள், எம்பிசி மற்றும் ஓபிசி ஆகிய பிரிவிலும் இணைக்கின்றனர். இதனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் கஷ்டப்பட்டு படித்து, போராடி மற்றவர்களுடன் ஜெயிக்க முடியவில்லை. இதனால் எங்களது சமூகம் பின்னுக்குச் செல்கிறது” என தெரிவித்தார். மேலும், யாழினி தற்போது மீண்டும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேசிய அளவிலான திருநங்கைகள் அழகி போட்டி: கோவை பிராக்சி 3ம் இடம் பிடித்து அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details