தஞ்சை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக கவர்னர் அறிவிப்பு வெளியிட்டார். இப்படிப்பட்ட அதிகாரத்தை ஆளுநருக்கு யார் வழங்கியது?. அரசியலமைப்புச் சட்டத்தில் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் அல்லது நீக்குகிற அதிகாரம் கவர்னருக்கு இல்லை.
முதலமைச்சருக்கு தான் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமும், நீக்கும் அதிகாரமும் உள்ளது. கவர்னர் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்பட்டு, சட்ட நெருக்கடியை உருவாக்கி, அதன் மூலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதற்கு உள்ள முயற்சிகளை மேற்கொள்கிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், “சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான தீட்சிதர்களுக்கு எதிரான, வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
முந்தைய அதிமுக அரசு முறையாக வழக்கை நடத்தாத காரணத்தினால் தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. முறைப்படி வழக்கை அரசு நடத்தி இருந்தால் நடராஜர் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட தீட்சிதர்கள் சுமார் 200 பேர் இருந்து கொண்டு அராஜகம் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கனகசபை மேடையில் ஏறி தரிசனம் செய்யக் கூடாது என்று போர்டு வைத்தனர்.