தஞ்சாவூர் மாவட்டம் மூலை அனுமார் கோயில் அருகே வசிக்கும் தம்பதி ராஜா - புவனேஷ்வரி. ராஜா பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு எட்டு நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
தாய் புவனேஷ்வரி வழக்கம் போல இன்றும் குழந்தைகளுக்கு பால்புகட்டி தூங்க வைத்துள்ளார். பின்னர் கழிவறை செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது, குரங்கு ஒன்று ஓட்டைப் பிரித்து வீட்டினுள் இறங்கி, தூங்கிக் கொண்டிருந்த பச்சிளங்குழந்தைகளைத் தூக்கிச் சென்றுள்ளது. ஒரு குழந்தையை தூக்கிச் சென்று சுவற்றின் மீது வைத்த குரங்கு, மற்றொரு குழந்தையைத் தூக்கிச் செல்ல வீட்டினுள் இறங்கியுள்ளது.
இதைக் கண்ட தாய் புவனேஷ்வரி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் குரங்கை விரட்டி அக்குழந்தையை மீட்டனர். இதற்கிடையில் காணாமல் போன மற்றொரு குழந்தையை உறவினர்கள் தேடியுள்ளனர். காணாமல் போன மற்றொரு குழந்தை அருகிலுள்ள குளத்தில் கிடந்ததை உறவினர்கள் கண்டு, அதனை மீட்டு, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஓட்டை பிரித்து பச்சிளங்குழந்தைகளைத் தூக்கி சென்ற குரங்கு குழந்தையை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பிறந்து 8 நாள்களே ஆன குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க, அங்கு சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட, வனத்துறையினருக்கு அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:உயிரிழந்த குரங்கு குட்டியை எடுத்துச் செல்லும் தாய் குரங்கு: கண்கலங்கவைக்கும் காட்சி