தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல் கொள்முதலில் முறைகேடு; நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ்! - உணவுத் துறை அமைச்சர் காமராஜ்

தஞ்சாவூர்: நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நெல் கொள்முதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவுத் துறை அமைச்சர் காமராஜ்
உணவுத் துறை அமைச்சர் காமராஜ்

By

Published : Jan 21, 2020, 10:23 PM IST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்பாக நெல் கொள்முதல் குறித்த விவசாயிகள்-அலுவலர்களுடனான, ஒருங்கிணைந்த கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையிலும், அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ், “கடந்தாண்டு 1766 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 19 லட்சத்து 10 ஆயிரத்து 665 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதன் மூலமாக 3 ஆயிரத்து 487 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ்

இதனால் 5 லட்சத்து 6 ஆயிரத்து 821 விவசாயிகள் பயனடைந்தனர். ஊக்கத் தொகை மட்டும் 120 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு 718 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

தற்போது 455 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக இதுவரை 87 ஆயிரத்து 493 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் ஊக்கத் தொகையாக 6 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இன்று முதல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும்” என்றார்.

நடவடிக்கை எடுப்பது குறித்து பேசிய அமைச்சர்

மேலும், “தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடில் ஈடுபடும் ஊழியர்கள் , அலுவலர்கள் மீது புகார் வந்தால் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

2021ல் கிளைமாக்ஸ் நாங்கள்தான் என ஸ்டாலின் தெரிவித்தது குறித்து உணவுத் துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பல கிளைமாக்ஸை நாங்கள் சந்தித்துவிட்டோம். கிளைமாக்ஸ் எப்போதும் நாங்கள்தான் அது எப்போதுமே எங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்றார்.

இதையும் படிங்க: யானைகள் வரும் போகும்... - வனத்துறை அமைச்சர் அலட்சிய பதில்

ABOUT THE AUTHOR

...view details