பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூர்:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா தஞ்சையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, 400 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், பழ வகைகள், புடவைகள் வழங்கினார்.
இவ்விழாவில் அரசு கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “கடந்த ஆண்டு பள்ளிக்கு முழுமையாக வராமல் இடை நிறுத்தம் செய்த மாணவர்கள் 1 லட்சத்து 80 ஆயிரம் பேரை மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளோம். இந்த ஆண்டும் மாநிலம் முழுவதும் இடை நின்ற மாணவர்கள், அதற்கு வாய்ப்புள்ள மாணவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம் மூலம், முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளது. வெளிப்படைத் தன்மையுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மத்திய அரசின் கூட்டுறவு சங்க திருத்த மசோதா, மாநில உரிமைகளைப் பறிக்கும்"