தஞ்சாவூர்:அம்மாபேட்டை, புளியக்குடி, மெலட்டூர், கத்திரிநத்தம், அகரமாங்குடி, வடக்குமாங்குடி, திருக்கருக்காவூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூபாய் 8.36 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி பள்ளி கட்டிடம், ரேசன் கடை, ஊராட்சி அலுவலக கட்டிடம், துணை நகர் நல மையம், வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (அக் 16) காலை முதல் மாலை வரை அந்தந்த பகுதிகளுக்குச் சென்று திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "பேரிடர் மேலாண்மை குறித்த கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் விரைவில் நடைபெற இருக்கிறது. கூட்டத்திற்கு பிறகு அதற்கு தகுந்தாற்போல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அதிகப்படியாக மழை பெய்தால் அரசை எதிர்பார்த்து இருக்க தேவை இல்லை. விடுமுறை விடுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியரே முடிவு செய்து கொள்ளலாம். மழைக் காலங்களில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற அனைத்து வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளியில் இடிந்த கட்டிடம், ஊறிப்போன காம்பவுண்ட் சுவர், வெடிப்பு விட்ட கட்டிடங்கள், மின்சாரம் மூடப்படாமல் உள்ள குழிகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக மாற்றி அமைக்கப்படும். பள்ளிகளில் 'காலை உணவு திட்டம்' என்பது வெற்றிகரமான திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது இந்தியாவிற்கு பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாகவும் இருந்து வருகிறது.