தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோலாகலமாக நடைபெற்ற நாச்சியார்கோவில் கல்கருட சேவை.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - மார்கழி பிரமோற்சவம்

Nachiyar Temple Kal Garuda Sevai: 108 வைணவத் தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்ற கல்கருட சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
கோலாகலமாக நடைபெற்ற நாச்சியார்கோவில் கல்கருட சேவை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 1:18 PM IST

கோலாகலமாக நடைபெற்ற நாச்சியார்கோவில் கல்கருட சேவை

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் கோயிலில் சீனிவாசப்பெருமாள் வஞ்சுளவல்லி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார். 108 வைணவத் தலங்களில் ஒன்றாக திகழும் இந்த கோயிலில், திருமங்கையாழ்வாரால் நூறு பாசுரங்கள் அருளி மங்களாசாசனம் செய்துள்ளார் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த தலத்தில் மற்றொரு சிறப்பம்சமாக உலகிலேயே வேறு எங்கும் காண முடியாத வகையில், ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய கல்கருடன் பகவான் தனிசன்னதியும் இங்கு உள்ளது.

வருடத்தில் வரும் மார்கழி மாத முக்கோடி தெப்பத்திருவிழா மற்றும் பங்குனி தேர் திருவிழாவின் 4ஆம் நாள் என இரு முறை மட்டும் சன்னதியில் இருந்து வெளி வரும் இக்கல்கருட பகவானை, முதலில் சன்னதியில் இருந்து வெளியே வரும்போது 4 பேரும் தொடர்ந்து 8, 16, என 32 பேர் வரை தூக்குவது வழக்கம்.

அதேபோல, வீதியுலா நடைபெற்று முடிந்த பின் கல்கருடன் மீண்டும் சன்னதிக்கு திரும்பும்போது 32 பேரில் இருந்து 16, 8 என ஆட்கள் எண்ணிக்கை குறைந்து, கடைசியாக 4 பேருடன் மீண்டும் சன்னதியைச் சென்றடைவர். பல சிறப்புகளைப் பெற்ற இந்த கோயிலில் மார்கழி பிரமோற்சவம் எனும் முக்கோடி தெப்பத்திருவிழா கடந்த 16ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையும் படிங்க: wait: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 8ஆம் நாள் திருவிழா..

இதைத் தொடர்ந்து நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும், பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நான்காம் நாளான நேற்று இரவு உலக பிரசித்தி பெற்ற கல்கருட சேவை சிறப்பாக நடைபெற்றது.

முதலில் சன்னதியில் இருந்து அலங்கார மண்டபம் வரை வந்த கல்கருட பகவானை, கொடிமரம் அருகே அமைந்துள்ள முன் மண்டபத்தில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து கல்கருட வாகனத்தில் விசேஷ அலங்காரத்துடன் உற்சவர் சீனிவாசப் பெருமாளும், அன்னபட்சி வாகனத்தில் வஞ்சுளவள்ளி தாயாரும் எழுந்தருளினர். தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் ஒருசேர பெருமாள் தாயாயர் எழுந்தருளினர்.

இதைத் தொடர்ந்து, வீதியுலா கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்த பிறகு, மீண்டும் கல்கருடன் தனது சன்னதிக்குச் சென்றது. மேலும், 8ஆம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 23ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெருகிறது.

மேலும் 9ஆம் நாள் நிகழ்ச்சியாக 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சீனிவாசப் பெருமாளும், வஞ்சுளவள்ளி தாயாரும் நிலை தெப்பத்தில் எழுந்தருள, முக்கோடி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. கடைசியாக 10ஆம் நாள் விழாவாக வருகிற 25ஆம் தேதி திங்கள்கிழமை சப்தாவர்ணம் படிச்சட்டத்தில் வீதியுலாவுடன் இந்த ஆண்டிற்காண மார்கழி பிரமோற்சவம் எனும் முக்கோடி தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க: சனிப்பெயர்ச்சி 2023; திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் திரளும் பக்தர்கள்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details