ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா தஞ்சாவூர்:சோழ பேரரசில், மாமன்னன் இராஜராஜ சோழன் 943ஆம் ஆண்டு ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் 2ஆம் பராந்தக சுந்தரசோழன், வானவன் மாதேவி ஆவர். இவரது உடன் பிறந்தோர் மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன், மூத்த சகோதரி குந்தவை ஆவர். இவரது மனைவியரில் ஒலோக மாதேவி, திரிபுவன மாதேவி என்பவர் குறிப்பிடதக்கவர்கள். இரண்டாம் குந்தவையும், இராசேந்திர சோழனும் இவரது குழந்தைகள் ஆவர். இவர் 985இல் தனது 42 வயதில் முடிசூடி பதவியேற்று 28 ஆண்டுகள் வரை அரசாட்சி செய்தார்
இவரது ஆட்சி காலத்தில் எழுப்பிய தஞ்சை பெரியகோயில் எனும் பிரகதீஸ்வரர் கோயில் இன்றளவும், சோழர் கால கட்டிட கலைக்கு சான்றாகவும், கலை பொக்கிஷமாகவும் பல நூற்றாண்டுகளை கடந்தும் காண்போரை பிரமிக்கவும், மெய்சிலிர்க்கவும் வைக்கிறது. 71 ஆண்டுகள் வரை வாழ்ந்த இவர் கடந்த 1014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி இயற்கை எய்தினார்.
ஆண்டு தோறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா ஐப்பசி திங்கள் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் 1038வது சதயவிழா வழக்கம் போல் அரசு சார்பில் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டு தஞ்சையில் சிறப்பாக இன்று நடைபெற்று வருகிறது.
கி பி 1014ஆம் ஆண்டு இராஜராஜன் இறந்த பின்னர் பழையாறை அரண்மனைக்கு அருகேயுள்ள ஓடத்தோப்பில் சமாதி அமைக்கப்பட்டதாகவும், அவர் சிவதீட்சை பெற்றவர் என்பதால் அவரது சமாதி அமைந்த இடத்தில் அவரது மகன் இராஜேந்திர சோழனால் மிகப்பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து நினைவுக் கோயில் அமைக்கப்பட்டது.
இது குறித்த கல்வெட்டுகள் அங்குள்ள பால்குளத்தி அம்மன் கோயில் மற்றும் கைலாசநாதர் கோயில்களில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 450 ஆண்டுகள் வரை சோழர்களை பாண்டியர்களால் வெல்ல முடியவில்லை.
3ஆம் இராஜேந்திரன் காலத்தில் மாறவர்ம சுந்தர பாண்டியன் (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) படையெடுத்து வெற்றி கொண்டு பழையாறை அரண்மனை, சோழன் மாளிகை அரண்மனை, கங்கை கொண்ட சோழபுரம் அரண்மனை போன்ற சோழர்களின் அரண்மனைகளை வெறியோடு தகர்த்து தரைமட்டமாக்கி வஞ்சம் தீர்த்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது.
உலகே வியக்கும் வகையிலும், மிகப் பிரமாண்டமாக அற்புதமான கலையம்சத்துடன் கட்டிடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக இன்றளவும் திகழும், தஞ்சை பெரியக்கோயிலை கட்டிய மாமன்னனது சமாதி இன்று ஓர் சிறு கொட்டகையின் கீழ் அமைந்துள்ளது இச்சமாதி மீது அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு பல ஆண்டுகளாக நாள்தோறும் பூஜைகள் நடந்து வருகிறது. இது மாமன்னன் இராஜராஜ சோழன் சமாதி தான் என ஒரு சில வரலாற்று ஆராய்ச்சியாளர்களால், கல்வெட்டு சான்றுகள் மூலமும் நம்பப்படுகிறது
இந்நிலையில், மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038வது ஆண்டு சதய விழாவினை முன்னிட்டு, கும்பகோணம் அருகேயுள்ள உடையாளுரில், இன்று கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், திரைப்பட இயக்குநர் மோகன் உட்பட ஏராளமானோர் அங்குள்ள சிவலிங்கத்திற்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்தும், தீபாராதனைகள் காட்டியும் வழிபட்டனர்.
இதையும் படிங்க: இராசராச சோழனின் 1038வது சதய விழா : 1038 நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியமாடி இசை அஞ்சலி!