தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் பெரியநாயகி உடனாகிய செஞ்சடையப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (ஜூலை 7) சிறப்பாக நடைபெற்றது. இதில், தருமபுர ஆதீன 27வது குருமணிகள் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூர்யனார் கோயில் ஆதீன குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசித்திருமட அதிபர் முத்துகுமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட பல்வேறு ஆதீனங்கள், குருமகா சன்னிதானங்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் பெரியநாயகி உடனாகிய செஞ்சடையப்பர் திருக்கோயில், திருக்கயிலாயப்பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான 27 திருக்கோயில்களில் ஒன்றாகும். தேவார பதிகம் பெற்ற சிறப்புடைய கோயில் தல விருட்சம் பனை மரமாகும். இக்கோயில் அம்பிகை அருந்தவம் இருந்து சிவபெருமானிடம் ஞானோபதேசம் பெற்றதும், இந்திரனின் சாபத்தால், ஐராவத யானை நாரதரின் சொற்படி, இக்கோயில் தடாகத்தில் நீராடி, செஞ்சடையப்பரை வழிபட்டு தன் முன்னுருவம் பெற்றதாக கூறப்படுகிறது.
‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ எனும் குறளுக்கு ஏற்ப இக்கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தி, தாடகையின் அன்பிற்கிணங்கி, திருமுடியை சாய்த்து மலர் மாலையினை ஏற்றுக் கொண்டதும், குங்குலிய நாயனாரின் அன்பிற்கு இணங்கி தலை நிமிர்ந்தார் என்பதும் இதன் புராணம்.
இந்தக் கோயிலில் வாசுகியின் மகளான சுமதி எனும் நாக கன்னிகை வழிபட்டு, அரித்துவசன் எனும் மன்னனை மணந்து, பின்னர் இங்கு பல்வேறு திருப்பணிகள் செய்து, நிறைவாக முக்தியும் பெற்றார்கள். இந்தக் கோயிலுக்கு இதற்கு முன்பு கடந்த 1968 மற்றும் 2003ஆம் ஆண்டுகளிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.