தஞ்சாவூர்:கும்பகோணம் மோதிலால் தெருவில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர், முகமது பக்ருதீன். இவர் கடந்த 12ஆம் தேதி இவர்களது சூப்பர் மார்க்கெட்டிற்கு, வாடிக்கையாளர் அல்லாத புதிய நபரிடம் இருந்து போன் ஆர்டர் வந்து உள்ளது. அந்த ஆர்டரில் தரமான ஆர்கானிக் அரிசி மூட்டைகள் ஏழு வேண்டும் என்றும், இதை ஆடி மாத அன்னதானத்திற்கு பயன்படுத்தப் போகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் லட்சுமி விலாஸ் தெருவில், சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு எதிரே பந்தடிமேடை பகுதியில் அமைந்துள்ள காத்தாயியம்மன் கோயிலில் டெலிவரி செய்ய கோரப்பட்டு அங்கு பணம் பெற்றுக் கொள்ள கூறியுள்ளனர். இதனை நம்பி, கடையிலிருந்து 8 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான ஏழு மூட்டை அரிசியை லோடு ஆட்டோவில் டெலிவரி செய்ய காத்தாயி அம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
நுழைவு வாயில் கேட் பகுதியிலேயே அங்கு நின்ற நடுத்தர வயது நபர், ஆறு மூட்டையை மட்டும் இங்கு இறக்குங்கள், ஒரு மூட்டையை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜான் செல்வராஜ் நகரில் இருக்கும் என் வீட்டில் இறக்கி விட்டு, அங்கு ஏழு மூட்டைக்கான தொகையை என் மனைவியிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
பின்னர் உடனடியாக மனைவிக்கு மொபைலில் அழைப்பது போல அழைத்து, இப்போது லோடு ஆட்டோவில் ஒரு மூட்டை அரிசி வரும் என்றும், அதனை இறக்கிக் கொண்டு அன்னதானத்திற்கு கொடுத்த ஆறு மூட்டை அரிசிக்கு சேர்ந்து ஏழு மூட்டைக்குமான தொகையை அவர்களிடம் கொடுத்து விடு என்பது போல பேசியுள்ளார். இதனை நம்பிய டெலிவரி செய்ய வந்த நபர்களும், ஒரு மூட்டையை மட்டும் எடுத்துக் கொண்டு ஜான்செல்வராஜ் நகரில் குறிப்பிட்ட முகவரியை தேடியுள்ளனர்.