தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணம் கொலை வழக்கு: 4 மாதங்களுக்கு பிறகு கொலையாளிகள் கைது! - Kumbakonam murder case

தஞ்சாவூரில் பணத்திற்காக மனைவி கண்ணெதிரே கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து இளைஞர்களை நான்கு மாதங்களுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதன்
ராமநாதன்

By

Published : Jul 18, 2020, 3:23 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மேலக்காவிரிகரை பகுதியில் துரைசாமி என்பவரின் மகன் ராமநாதன் (65) தனது மனைவி விஜயாவுடன் (58) வசித்துவந்தார்.

ராமநாதன் எண்ணை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மார்ச் 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தனியே தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டுமென இரண்டு இளைஞர்கள் வெற்றிலை பாக்கு, பழம், தாம்பூல தட்டுடன் உள்ளே நுழைந்தனர். உடனே விஜயா தொலைக்காட்சியின் ஒலியை குறைத்து அணைக்க முயன்றார்.

ஆனால் வந்தவர்கள் டிவியை நிறுத்த வேண்டாமென கூறியதால் விஜயாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ராமநாதன் குடிக்க தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டதால் விஜயா சமையலறைக்கு சென்றார்.

கைதானவர்கள்

இந்நிலையில் வீட்டிற்கு வெளியே காத்திருந்த மற்ற மூன்று பேரும் உள்ளே நுழைந்து, விஜயாவை வலுக்கட்டாயமாக அறைக்குள் அழைத்து சென்று கதவை வெளிப்பக்கமாக தாழ் போட்டனர். பின்னர் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொடு இல்லையெனில் விஜயாவை கொலை செய்துவிடுவோம் என்று ராமநாதனை கொள்ளையர்கள் மிரட்டினர்.

இதனால் பயந்துபோன ராமநாதன், விஜயாவை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என கையெடுத்து கும்பிட்டதுடன், வீட்டில் இருந்த நகை, பணத்தை கொடுத்தார். அதன் பிறகு அறையின் கதவை திறந்து விஜயாவை கொள்ளையர்கள் விடுவித்தனர். மேலும் மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்பு கம்பியை காட்டி, உன்னை உயிரோடு விட்டால் எங்களை போலீசில் காட்டி கொடுத்துவிடுவாய் என கூறிக்கொண்டே ராமநாதன் கழுத்தை அறுத்துள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் ராமநாதன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து ஐந்து பேரும் தப்பியோடினர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (16.07.20) இரவு பழைய பாலக்கரையில் காவல்துறையினர் சோதனையில் இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஐந்து பேரை விசாரித்தனர். விசாராணையில் கும்பகோணம் ஆழ்வான்கோவில் தெரு தங்கபாண்டியன் (41), இவனது கூட்டாளிகள் அசூர்ரோடு சித்தி விநாயகர் நகர் வினோத் (30), மேட்டுத்தெரு ஹரிஹரன் (22), தஞ்சை மாதாக்கோட்டை ரஞ்சன் (29), பாலாஜி (25) ஆகிய 5 பேரும் ராமநாதனை மார்ச் மாதம் கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்து ஐந்து கத்திகள், மூன்று செல்போன்கள், நாலரை பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:இறைச்சிக் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு... அடையாளம் தெரியாத கும்பல் வெறிச்செயல்!

ABOUT THE AUTHOR

...view details