தஞ்சாவூர்: அழகன் என்றும் தமிழ்க்கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமையப்பெற்றது, கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில். மலைக்கோயிலான இத்தலத்தில் தான் முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் சொன்ன பெருமைகொண்டது.
வேறு எங்கும் காண முடியாதபடி, இத்தலத்தில் அறுபது தமிழ் வருட தேவதைகளும் 60 படிக்கட்டுகளாக அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் தமிழ் வருட பிறப்பான, சித்திரை மாதம் 1ஆம் தேதி திருப்படி பூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோலவே ஆடிக்கிருத்திகை மற்றும் பெரிய கார்த்திகை எனும் திருக்கார்த்திகை திருவிழாவும், தை பூசத்திருவிழாவும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறும்.
இத்தகைய சிறப்பு பெற்ற சுவாமிமலையில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று விசேஷ மலர் அலங்காரத்தில் அருள்பாலிக்க, உற்சவர் வள்ளி தேவசேனா சமேத சண்முகசுவாமி, தேவசேனா சமேத சந்திரசேகரர், வீரபாகு, வீரகேசரி ஆகியோர் சிறப்புமலர் அலங்காரத்தில் மலைக்கோயிலில் இருந்து நாதஸ்வர மேள தாளம் முழங்க, சிதறு தேங்காய் உடைத்து, மலைக்கோயிலில் இருந்து 60 படிக்கட்டுகளை இறங்கி, வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள கந்தசஷ்டி விழா இனிதே தொடங்கியது.
கந்தசஷ்டி விழாவின் முதல் ஆறு நாட்களும் காலையும், மாலையும் சுவாமி படிச்சட்டத்தில் உற்சவர் திருவீதியுலா நடைபெறுகிறது. சஷ்டி தினமான 6ஆம் நாளில் அதாவது வருகிற 30ஆம் தேதி மாலை சூரசம்ஹாரமும் நடைபெற்று பின்னர், தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறும்.
சுவாமிமலையில் கோலாகலமாக தொடங்கிய கந்தசஷ்டி விழா இதையும் படிங்க:திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்