தஞ்சாவூர்:கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட தஞ்சை வடக்கு மாவட்ட திமுக புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(ஜூன் 27) காலை கும்பகோணம் ரயில்வே சாலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக இளைஞரணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி., தலைமையில் ஐம்பொன்னால் ஆன செங்கல்லை அடிக்கலாக நாட்டினார்.
தொடர்ந்து மூர்த்தி கலையரங்கில் நடைபெற்ற திராவிடத்திருவிழா நிகழ்வில் பங்கேற்ற உதயநிதி, தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 320 ஏழை எளிய பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களை நலத்திட்ட உதவியாக வழங்கினார். மூன்றாம் பாலினத்தவர்கள் பலர் உதயநிதியை சந்தித்து விழா மேடையில் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
ஆண்டவருக்கு நேர்த்திக்கடன்:இந்த திராவிடத்திருவிழாவில், தலைமையுரையாற்றிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'ஆண்டவனை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, ஆண்டவன் நம்மை ஏற்கும்படியாக நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்ற முத்தமிழறிஞர் கூற்றுப்படி, நான் ஆண்டவர் எனக் குறிப்பிடுவது தமிழிற்காக, தமிழினத்திற்காக, தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட முத்தமிழறிஞரை தான்.
அவரது பக்தர்களான கட்சித்தொண்டர்கள் திருவிழாவில் ஆண்டவருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதைப் போல, இன்றைய திராவிடத் திருவிழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதற்காக, கழகத்தையும், தமிழ்நாட்டையும் வருங்காலத்தில் வழிநடத்த இருக்கின்ற உதயநிதி, தனது சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிமையுடன், அம்மாவாக, சகோதரியாக சீர் செய்ய வந்திருக்கிறார்.
மாவட்டச்செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம், திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர், பொது மக்கள் நலனுக்காக, பல திட்டங்களை, தன் பகுதிக்கு கேட்டுகேட்டு பெறுபவர், தற்போது ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளதால், ஒருகால், சபையில், பிரதமர் மோடி இருக்கும்போது, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை தங்கள் பகுதியாக பம்பப்படையூரில் அமைக்க கேட்டாலும் கேட்பார்’ என கிண்டலாக குறிப்பிட்டார்.