தஞ்சாவூர்: தமிழ்நாடு முழுவதும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் இன்று வெளியானது. இவர் பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இவரது முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தனுஷ் கூட்டணியில் கர்ணன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அள்ளித் தந்தது.
தற்போது நடிகரும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று (ஜூன் 29) திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும், தஞ்சாவூரில் இரண்டு தியேட்டர்களில் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் காட்சி ரசிகர்கள் காட்சி என்பதால் தஞ்சாவூரில் 200க்கும் மேற்பட்ட மன்ற ரசிகர்கள், தஞ்சை திலகர் திடல் பகுதியில் இருந்து தாரை தப்பட்டையுடன் மாமன்னன் திரைப்பட பதாகைகளைப் பிடித்தபடி வந்தனர். மேலும், மாமன்னன் திரைப்படம் என்பதால் மன்னர்கள் காலத்தில் உள்ள சிப்பாய்கள் போல் உடை அணிந்து, போர்வாள்களை எடுத்துச் சென்று ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற, மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட இடமாக விளங்கி வரும் தஞ்சை பெரிய கோவில் அருகே வரும்போது பெப்பர் ஸ்பிரே மூலம், காகித கலர் பேப்பர் அடித்துக் கொண்டு விசில் அடித்து உற்சாகமாக வந்தனர். மேலும் சிறிது தூரத்தில் அங்கு உள்ள ராணி பேரடைஸ் திரையரங்கிற்குக் கூட்டமாக வந்ததும் அங்கும் பெப்பர் ஸ்பிரே கலர் பேப்பர் அடித்தனர். இது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு பெறும் இடையூறாக இருந்தது. இதனால் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் பெப்பர் ஸ்பிரே மற்றும் காகித கலர் பேப்பர் வெடிக்க அனுமதி இல்லை என்று கூறினர். இதனைத் தட்டி கேட்டதால் போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.