திருவலஞ்சுழி நடக்கும் பகீரங்கமாக கள்ள மது விற்னை: திமுக கோஷ்டி மோதலின் வெளியான உண்மை! தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையை அடுத்துள்ள திருவலஞ்சுழி ஊராட்சி மன்ற பகுதியில் கடைவீதி, வெள்ளை விநாயகர் கோயில், ஈமகிரியை மண்டபம், முதியோர் இல்லம் அருகே என பல இடங்களில் அரசு மதுபான கடை இரவு பூட்டப்பட்ட பிறகு தொடங்கி மறுநாள் திறப்பதற்கு முன்பு வரை என சுமார் 10 மணி நேரம் வரை வெளி மாநில மது வகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் மது விற்பனையாளர்களுக்குள் அவ்வப்போது கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. கலால் பிரிவு காவல்துறையினர் இதனை கண்டுகொள்வதில்லை. சுவாமிமலை காவல்துறையினரும், கும்பகோணம் உட்கோட்ட காவல்துறையினரும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என அப்பகுதி மக்கள் புலம்பி வந்தனர்.
இந்நிலையில் திருவலஞ்சுழி ஊராட்சி மன்ற தலைவர் திவ்யாவின் (திமுக) தந்தையும், திருவலஞ்சுழி திமுக கிளை கழக செயலாளருமான காமராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சிலருக்கும், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் விஷ்ணு ஆகியோருக்கும் இடையே மது விற்பனை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் விஷ்ணு என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதில், ரஞ்சித்குமார் சுவாமிமலை காவல் நிலையத்தில் காமராஜ், சிரஞ்சீவி, அன்பரசு, தேவராஜ் மற்றும் காளிதாஸ் ஆகிய ஐந்து பேர் மீது புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யாவின் தந்தை காமராஜ் தலைமறைவாகவுள்ளதால், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
எப்படி இருப்பினும் திருவலஞ்சுழி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக திமுக நிர்வாகியும், ஊராட்சி மன்ற தலைவர் திவ்யாவின் தந்தையுமான காமராஜே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதை போல தெரிவித்துள்ளார். ஆனால் சுவாமிமலை போலீசாரோ காமராஜ் தான் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பதாக கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 25 பேர் பலியான நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பரவலாக, பல இடங்களில் இன்னமும் வெளி மாநில மதுபான வகைகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது. மது விற்பனை தொடர்பாக நடைபெற்ற இந்த மோதலை சாதாரணமாக ஒருவர் மீது எச்சிலை துப்பியதால் ஏற்பட்ட தகராறு என சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: சட்டக்கல்லூரி கலவரத்தில் பொய் வழக்கு; வழக்கறிஞருக்கு நிவாரணம் பெற உரிமை - உயர்நீதிமன்றம் அதிரடி!