ராஜராஜ சோழனின் பாட்டி சிவபுரம் கோயிலுக்கு வழங்கிய சிலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ளது சிவபுரம் சிங்காரவல்லி சமேத சிவ குருநாதசுவாமி கோயில். இது பிரசித்தி பெற்ற பைரவர் தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஐம்பொன்னால் ஆன சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை, ராஜ ராஜ சோழன் பாட்டியால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.
1956ஆம் ஆண்டு மண்ணில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இச்சிலைக்கு கிருஷ்ணாபுரம் மற்றும் சிவபுரம் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்ட நிலையில், அப்போது கோட்டாட்சியராக இருந்த முத்து இருளாண்டி என்பவர் மண்ணை ஆய்வு செய்து சிலை சிவபுரத்திற்குரியது என அறிவித்து, அதனை கோயிலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும், இச்சிலை இக்கோயிலுக்குரியது என்ற கல்வெட்டும் உள்ளது. இந்த சிலை கும்பகோணத்தில் உள்ள சிற்ப கூடத்திற்கு புதுப்பிப்பு பணிக்காக சென்ற போது, அதே போன்று போலி சிலை ஒன்று உருவாக்கி அதனை கோயிலுக்கு வழங்கி விட்டு, உண்மையான நடராஜர் சிலை 1958இல் வெளிநாட்டிற்கு விற்பனை செய்து கடத்தப்பட்டது.
15க்கும் மேற்பட்ட கைகள், பல நாடுகள் என மாறி அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள கண்காட்சியில் சிலை வைக்கப்பட்டு இருந்தது. வெளிநாட்டில் இருந்து சிவபுரம் கோயிலுக்கு பண்டைய கால சோழர்கள் வரலாறு குறித்து ஆய்வு செய்த டக்ளக்ஸ் என்பவர் தான், கோயில் திருவிழாவின் போது இது போலி சிலை என்றும், உண்மை சிலை அமெரிக்கா கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து உண்மையான சிலை மாயமானது குறித்து 1962ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, பின்னர் தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி இவ்வழக்கிற்காக வெளிநாடு சென்று வாதாடி, அதை 1982இல் மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். கோயிலில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி, சிலை திருவாரூர் சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இக்கோயில் திருவிழாக்களில் நடராஜரை வழிபாடு செய்ய சிவபுரம் கோவிலில் ஒப்படைக்க வேண்டும் என சிவபுரம் கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று இன்று கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு சிலை கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து இச்சிலையினை நீதிமன்றத்தில் இருந்து கீழே இறங்கி வந்து, வேனில் வைக்கப்பட்டிருந்த நடராஜர் மற்றும் விநாயகர் சிலைகளை நேரில் பார்வையிட்ட நீதித்துறை நடுவர் சிவசக்திவேல் கண்ணன், இச்சிலையினை முறைப்படி கோயிலில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தார். ஏறத்தாழ 67 ஆண்டுகளுக்கு பிறகு சிவபுரம் கோயிலுக்கு மீண்டும் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.
சிலைகள் மீண்டும் கோயிலுக்கு வருவதால் கிராம மக்கள் சார்பில் அங்கு சிறப்பான வரவேற்பும், நடராஜபெருமானுக்கு விசேஷ அபிஷேகமும் நடைபெற்றது. சிலைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு கோயிலில் நிரந்தரமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தற்காலிக ஏற்பாடாக மீண்டும் இன்று மாலை இச்சிலைகள் கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் சென்னையில் வி.பி.சிங் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!