தஞ்சாவூர்:தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆடை, நகை, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கி வருகிறார்கள். இதனால், கடைவீதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதுவதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் ஆடை, பட்டாசு, இனிப்பு போன்ற பொருள்களை வாங்குவதற்காகக் கடைவீதிகளில் மக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் பொற்றாமரை குளம் பகுதி கடை வீதிகள் களை கட்ட தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நூறு மைல்களுக்கு அப்பால் இருந்து கும்பகோணத்தில் நல்ல முறையில் வணிகம் நடக்கும் என்பதை நம்பி, நூற்றுக்கணக்கான சிறு வணிகர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆயத்த ஆடைகள், அழகு சாதனப்பொருட்கள், போர்வை, கால் மிதியடிகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்வதற்காக வருகை புரிந்துள்ளனர்.
இங்கு, பண்டிகை காலங்களிலும் விலை மலிவாகக் கிடைக்கும் என்பதால், கும்பகோணம் பொற்றாமரை குளம், ஹாஜியார் தெரு, டைமெண்ட் லாட்ஜ் இறக்கம், காந்தி பார்க் , உச்சிப்பிள்ளையார் கோயில், சாரங்கபாணி பெரிய தேர் என சுமார் 4 கி.மீ சுற்று வட்டத்திற்கு, சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் குடும்பமாக, பொருட்களை வாங்க ஆர்வத்துடன் வருகின்றனர்.