தஞ்சை மாவட்டம் சங்கரன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாணவி அர்ச்சனா. இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு அரசினர் உயர் நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
பொருளாதாரச் சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தின் மகளான ஏழை மாணவி அர்ச்சனா, தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு வரும் நெகிழி இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வால், நெகிழிக்கு மாற்றாக ஏதேனும் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என எண்ணி வந்தார். இதைத் தொடர்ந்து அந்த மாணவி மக்காச்சோள மாவு மற்றும் வினிகர் ஆகியவற்றைக் கொண்டு பயோபிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க முடிவு செய்து, தனது அரசுப் பள்ளி ஆசிரியை ஜென்சிரூபா, தலைமை ஆசிரியர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி இயற்கைப் பொருட்களான மக்காச்சோளமாவு, தண்ணீர், வினிகர், க்ளிசரின் ஆகியவற்றைச் சேர்த்து அதை சுடவைத்து ஒரு கலவையைத் தயார் செய்தபோது அதில் (பயோ - பிளாஸ்டிக்) உயிரி நெகிழி கிடைக்க, அதனைக் கொண்டு காகிதம், சிறிய தட்டு, கிண்ணம் ஆகியவற்றை செய்து உள்ளார்.