தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகராட்சியில், போக்குவரத்து மற்றும் வணிகம் நிறைந்த பகுதியாக விளங்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹாஜியார் தெருவில் தொடங்கி, ஆயிகுளம் சாலை, நாகேஸ்வரன் வடக்கு வீதி, உச்சிப்பிள்ளையார் கோயில், பொற்றாமரை குளம், மொட்டை கோபுரம் வரை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு தீபாவளி சமயங்களில் இருபுறமும், தற்காலிகமாக கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.
அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வணிகர்களால் அமைக்கப்படும் இந்த கடைகளில் குறைந்த விலையிலான வேட்டி, சேலை, கைலி, நைட்டி, உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், துண்டு, போர்வை, கால் மிதியடிகள், கைப்பைகள், காலணிகள், பர்ஸ், பெல்ட்டு, வளையல், தோடு, பொட்டு, செயின் வகைகள், குடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், துரித உணவு கடைகள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு பண்டிகை காலங்களில் கடை அமைத்து வணிகத்தில் ஈடுபடும் இந்த சிறு வணிகர்கள் அனைவரும், தீபாவளி அன்று விடியற்காலை வணிகத்தை முடித்துவிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மீண்டும் பயணப்படுவர். இக்குறுகிய காலத்தில், இவர்கள் கைவசம் உள்ள பெரும் பகுதி பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இங்கு கிட்டும்.
எனவே, அந்த நம்பிக்கையில் இங்கு ஆண்டு தோறும் தங்களது குடும்பங்களை மறந்து, சாலையே கதி என காலை முதல் இரவு வரை காத்திருந்து இவர்கள் வணிகம் செய்கின்றனர். இன்னும் சிலர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் இங்கு வந்து, இந்த குறுகிய கால வணிகத்தில் இறங்குகின்றனர். இந்த நிலையில், இவ்வாண்டு மாநகராட்சி பகுதியில் வழக்கம் போல 500 முதல் 750 வரையிலான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.