தஞ்சாவூர்: காந்தியின் பிறந்தநாள் விழா, காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் நேற்று (அக்.2) கொண்டாடப்பட்டது. இந்திய நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த தலைவர்களில் காந்தியின் பங்கு பெரும் அங்கம் வகித்ததாக கருதப்படுகிறது. இதனையடுத்து, காந்தியின் 155வது பிறந்தநாள் விழாவினை பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கொண்டாடினர்.
மேலும், அவரது உருவச் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ராணுவத்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் கதர் விற்பனை நிலையத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தனர். இந்நிலையில், காந்தியின் சில சுவாரஷ்ய நிகழ்ச்சிகளும் தஞ்சையில் நடைபெற்றுள்ளன. காந்தி குறித்து மாநகராட்சியில் அரசுப் பணியில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற கிளமெண்ட் என்பவர் சில தகவலைத் தெரிவித்தார்.
அதாவது, "தஞ்சை மாநகராட்சியில் காந்தியின் மார்பளவு சிலை உள்ளது. கடந்த 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி காந்தி உயிரிழந்தபோது, அவரது அஸ்தி தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் கரைக்க வந்தனர். அப்போது, தஞ்சாவூரில் நகராட்சி அலுவலகத்தில் அவரது அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதன் நினைவாகத்தான் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் சிறப்பு செய்தியாக காந்தி சிலை அமைந்துள்ள குறைந்த சதுர அடி நிலம், அப்போதைய மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதாக தகவல் வழி செய்தி ஆகும். அதேபோல், தஞ்சாவூரின் மையப்பகுதியில் பெசண்ட் அரங்கம் உள்ளது. அது இப்போது பெசண்ட் லாட்ஜ் என்று கூறப்படுகிறது.