தஞ்சாவூர்:கடந்த சில வாரங்களாக பல மாநிலங்களில் கடும் வெள்ளம், தொடர் மழை காரணமாக, காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து, அடித்தட்டு மக்கள் முதல் உயர்வகுப்பு மக்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தக்காளி விலை ராக்கெட் போல் உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. கிலோ ரூபாய் 50, 80, 100, 120 என தற்போது ரூபாய் 140 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விற்பனைக்கு தனியார் பாதுகாவலர்களை வைத்து விற்பனை செய்த சம்பவங்கள் எல்லாம் நாட்டில் அரங்கேறியது. தக்காளி கூடுதல் தொகைக்கு விற்பனை ஆகி பல லட்சம் வருவாய் ஈட்டிய நிலையில், அதில் ஏற்பட்ட தகராறில், அண்டை மாநிலத்தில் ஒரு கொலை கூட நிகழ்ந்துள்ளது என்றால், தக்காளி நாடு தழுவிய அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனை உணரவும் அறியவும் முடியும்.
இந்நிலையில், கும்பகோணம் ரயில் நிலையம் அருகே, காமராஜர் சாலையில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடை நிர்வாகம், தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த ராக்கெட் வேக தக்காளி விலையை நூதன விளம்பர யுக்தியாகப் பயன்படுத்தி, காண்போரையும், வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் 5 பேர் உண்ணும் அளவிலாக ரூபாய் 1,100 மதிப்பிலான பக்கெட் சிக்கன் பிரியாணி மற்றும் ரூபாய் 1,400 மதிப்பிலான பக்கெட் மட்டன் பிரியாணி வாங்குவோருக்கு தலா ஒரு கிலோ தக்காளி இலவசம் என அறிவித்தது.