தஞ்சாவூர்: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்று தஞ்சாவூரில் அதிமுக கட்சி நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி என்றும் முன்னாள் மேயர் தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி ஒற்றைத் தலைமையினை வலியுறுத்தும் வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கை ஓபிஎஸ் தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் அதிமுகவில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு பெற்றது செல்லும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கியதும் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை ரத்து செய்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.