தஞ்சை ஊர்காவல் படையில் முதல்முறையாக திருநங்கை பணிநியமனம்! தஞ்சாவூர்:கடந்த அக்டோபர் மாதம், தஞ்சை மாவட்ட காவல்துறையில், ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு, உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், 1 பெண், 1 மூன்றாம் பாலினத்தவர் என 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கந்தபுனேனி, தேர்வு செய்யப்பட்ட 36 நபர்களுக்கும், பணி நியமன ஆணைகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது திருநங்கை சிவன்யா (26) அடிப்படை பயிற்சி பெற்று வருகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவன்யா, “நான் பயிற்சி பெறும் இடத்தில் வேற்றுத்தன்மை இல்லாமல் சக மனிதர்களாகப் பழகி பயிற்சி அளித்து பழகுகின்றனர். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வேலை பார்த்து வந்த நிலையில் திருநங்கையாக மாறியதால் எனது வீட்டில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது மற்ற திருநங்கைகளுடன் குடும்பமாக தஞ்சை மானோஜிபட்டி பகுதியில் வசித்து வருகிறேன்.
இந்தப் பணியின் மூலம் பொதுமக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன். திருநங்கைகள் சமுதாயத்தை வேற்றுத்தன்மையுடன் பார்க்க வேண்டாம். திருநங்கைகளுக்கு தகுதிக்கு ஏற்றார் போல் அரசு வேலை வழங்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: 50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் வென்ற 'தமிழ்நாட்டு ஹல்க்'!