தஞ்சை மாவட்ட கடற்கரைப் பகுதியான கீழத் தோட்டம் கிராமத்தில் 750க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதன்மூலம் 200க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மீனவர்கள் காட்டாற்றை தான், துறைமுக வாய்க்காலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடலிலிருந்து வெளியாகும் மணல் திட்டுகள் அதிக அளவில் தேங்கி, அதாவது 500 மீட்டர் நீளமும் 200 மீட்டர் அகலமும் சுமார் 20 அடி உயரமும் கொண்ட மணல் திட்டுகளாக இந்த முகத்துவாரத்தில் அடையத் தொடங்கியுள்ளது.
இந்த முகத்துவாரம் அடைபட்டதால் காட்டாற்றில் இருந்து வரும் வெள்ளம், கடலில் கலக்க முடியாமல் தடுக்கப்பட்டு, தண்ணீர் ஊருக்குள் வந்து விடுகிறது. மேலும், இப்பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தால், காட்டாற்று நீர் வீடுகளுக்குள் புகுந்து விடும் நிலை உருவாகியுள்ளது. இது தவிர, மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மீன்பிடித்தொழில், அதாவது கடலின் முகத்துவாரம் அடைபட்டதால், துறைமுக வாய்க்கால் மூடப்பட்டு, படகுகள் கடலுக்குள் செல்லமுடியாமல் இருக்கிறது .