ராஜராஜ சோழன் சதய விழா: மாமன்னன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை! தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை முன்னிட்டு ராஜராஜ சோழன் சிலைக்கு பல்வேறு அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேகப் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது ஆண்டு சதய விழா நேற்றும் இன்றும் (அக் 24, 25) ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து தஞ்சையில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரியக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட பந்தலில் பட்டிமன்றம், கருத்தரங்கம், மேடை நிகழ்ச்சி, குரலிசை, திருமுறை பண்ணிசை, நாதசங்கமம், திருமுறை இசை, கவியரங்கம், சிவதாண்டவம், மற்றும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்குபெற்று நடனமாடிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதேபோல் இரண்டாம் நாளான இன்று (அக் 25) காலை மங்கள இசையுடன் தொடங்கி, திருக்கோயில் பணியாளர்களுக்கு தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு புத்தாடைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பெரியக்கோயிலில் அம்மன் சன்னதியில் ராஜராஜ சோழன் மீட்டெடுத்த தேவார பதிகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, யானை மேல் தேவாரப் பதிகம் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவகணங்கள் இசைக்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மேலும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவார்கள் திருமுறைகள், தேவாரங்களை பாடியபடி வந்தனர்.
பின்னர், அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து திருமுறை ஓதுபவர்களுடன் ராஜ வீதிகளில் திருமுறைத் திருவீதி உலா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல் எஸ்பி ஆஷிஷ்ராவத், மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி, சதய விழா குழு தலைவர் செல்வம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலைக்கு பல்வேறு அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சதய விழா நிகழ்ச்சியாக அருள்மிகு பெருவுடையார், அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான பல்வேறு அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடும் சிறப்பாக நடைபெறுகிறது.
இன்று மாலை நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கமம், சதய விழாக் குழுவின் மாமன்னன். ராஜராஜன் விருது, மற்றும் மாமன்னர் ராஜ ராஜனை பெரிதும் கொண்டாடுவது 'சமயமே, சமூகமே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளன.
மேலும் அருள்மிகு பெருவுடையார் பெரியநாயகி திருவுருவச் செப்புத் திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளன. சதய விழா முன்னிட்டு தஞ்சை மாநகரம் விழாக்கோலமாக காணப்பட்டது.
இதையும் படிங்க:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை இசை வழிபாடு! இசையின் வாயிலாக அம்பாளை தரிசித்த பக்தர்கள்!