தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ் மொழிக்கு என்று அமைக்கப்பட்ட உலகில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள சுவடித் துறை, உலகெங்கிலும் உள்ள தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடி, தொகுத்து பாதுகாப்பது, பதிப்பிப்பது, வெளியிடுவது மற்றும் சுவடிகளை மின்படியாக்கி ஆய்வுக்கு உரிய தரவுகளாக மாற்றுவது ஆகியப் பணிகளை முதன்மையாகக் கொண்டுள்ளது.
இந்தத் துறையில் தமிழ், கிரந்தம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பாலிமொழி சுவடிகள் மற்றும் ஆவண சுருணைகள் என 7 ஆயிரத்து 747 சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சுவடித்துறை சார்பில் பழங்கால அரிய ஓலைச் சுவடிகளை மின்படியாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை 4 ஆயிரம் தமிழ்ச் சுவடிகளுக்கான விளக்க அட்டவணைகள் எட்டுத் தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. கணிப்பொறி வழி அனைத்துலகத் தமிழ் ஓலைச் சுவடிகள் அட்டவணை என்ற பெயரில் தமிழில் ஐந்து தொகுதிகள், ஆங்கிலத்தில் ஐந்து தொகுதிகள் (Computerised International Catalogue of Tamil Palmleaf Manuscripts, vol 1 - 5) என பத்து தொகுதிகளாக மொத்தம் 21 ஆயிரத்து 973 ஓலைச் சுவடிகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
லண்டன் பிரிட்டிஷ் நூலக Endangered Archive Programe (EAP) திட்டத்தின் மூலம் தமிழ்ச் சுவடிகளை மின்படியாக்கம் செய்வதற்கு 51 ஆயிரத்து 40 பவுண்ட் நிதி வழங்கி உள்ளது. அதேபோல், டெல்லியில் உள்ள தேசிய சுவடிகள் இயக்ககம், தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச் சுவடித் துறையில் சுவடிகள் பாதுகாப்பு மையம் ஒன்றை உருவாக்கி, ஆண்டுதோறும் 7 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் 12 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வருகிறது.
ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் முறை: மின்படியாக்கம் செய்யும் பணிகளாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஓலைச்சுவடிகளைப் பெற்று, நுண்கிருமி நீக்கப்பேழையில் வைத்து சுத்தம் செய்து, அனைத்து சுவடிகளுக்கும் சிற்றநல்லா ஆயில் வைத்து, எழுத்து தெரியாத சுவடிகளுக்கு கருப்பு மை பூசப்பட்டு, பிறகு வரிசை கிரமமாக அட்டவணை செய்து, சுவடிகள் மின்மயமாக்கும் பணிகள் நடைபெறும்.
அதன் பின்னர் இவை அனைத்தும் கணினியில் சரிபார்க்கப்படுகிறது. இந்தப் பணி முடிவுற்றதும் நூலகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. மேலும், ஓலைச் சுவடிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்க வால் மிளகு, பட்டை, கிராம்பு, பச்சை கற்பூரம், வசம்பு மற்றும் கருஞ்சீரகம் ஆகிய மணப்பொருள் அடங்கிய முடிச்சுப் பைகள் வைக்கப்படுகிறது.