தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் சாலியமங்கலம், பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் நெல்லை உலர்த்துவதற்கு உலர் கள வசதி இல்லாததாலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் போதுமான இடவசதியோ, களமோ இல்லாததாலும், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி உலர்த்துகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை காய வைப்பதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. அதோடு, வாகனங்கள் வரும் சாலையில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நெல்லை உலர்த்தும் பணியில் ஈடுபடுவதால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, அம்மாபேட்டை, சாலியமங்கலம், பூண்டி உள்பட அனைத்து கிராமங்களிலும் நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 12ஆம் தேதி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு, எம்பி பழநிமாணிக்கம் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.