தஞ்சாவூர்: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின், மாநில செயற்குழு கூட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் மாநில தலைவர் வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்துமாநில செயற்குழு கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த, கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் டி. ரவீந்திரன், ’இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருமண்டக்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து இதுவரை வழங்கப்படாமல் இருக்கின்ற கரும்பு நிலுவை தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு, மாநில அரசு நிர்ணயிக்கும், கரும்பு ஆதார விலையை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பூட்டப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும். ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் நடைபெற்ற டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 26.01.23 அன்று நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கும், ஏப்ரல் 5 மற்றும் 6 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்வது என்றும், கடந்த 2022 நவம்பர் 30-ம் தேதி முதல் தொடர்ந்து 54 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளின், கோரிக்கையான திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு ஆதார விலை, கரும்பு நிலுவை தொகை, ஆலையின் லாபத்தில் பங்கீட்டுத் தொகை என அனைத்தும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும்.