தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர்: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த கரோனா அல்லாத உள் நோயாளிகள், புற நோயாளிகளிடம் அரசு மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சை சிறப்பாக பயனுள்ளதாக அமைகிறதா என கேட்டிருந்தார்.
தற்பொழுது பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளாதல், இனிவரும் நாட்களில் அதிகமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. உள் நோயாளிகள், புற நோயாளிகள், சிகிச்சை மேற்கொள்ள தனி பாதைகள் அமைப்பது, தனி சிகிச்சை பிரிவு ஏற்ப்படுத்துதல் தொடர்பாகவும் கரோனா நோயாளிகளை தனி வார்டு பகுதிக்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி தங்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்து தரும் எனவும் உறுதி அளித்தார்.
கரோனா பாதிப்பு அல்லாத மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு, அறுவை அரங்கம் ஆகிய பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதம் வரை 1, 200 சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 46 சிறுநீரக நோயாளிகளுக்கு 86 முறை ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது. பொது அறுவை சிகிச்சை பிரிவு மூலமாக 120 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதமுத்து, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.