தஞ்சையில் அகப்பை தயாரிக்கும் குடும்பத்தினர் தஞ்சாவூர்:தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான உழவர்களின் திருநாள், பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டும் வருகிற ஜனவரி 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாட தமிழகமே தயாராகி வருகிறது. அந்த வகையில், பொங்கல் பானை உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் வரிசையில் அகப்பை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை என்றாலே, கிராமப்புறங்களில் அதிகாலையில் வீடுகளின் முன்பு கோலமிட்டு, மண் அடுப்பில் புத்தம் புதிய மண் பானையில், அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் செய்து கரும்பு வைத்து பொங்கலிட்டு, கதிரவனுக்கு படைத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால் தற்போது நகரப் பகுதிகளில் கேஸ் அடுப்பில் பொங்கல் வைக்கும் பழக்கமாக மாறி வருகிறது. இந்நிலையில், கிராமங்களில் இன்றளவும் பொங்கல் பண்டிகையில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றம் வகையில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக அகப்பை உள்ளது.
தஞ்சையை அடுத்த வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில் பாரம்பரியமாக பொங்கல் தினத்தன்று அகப்பையை பயன்படுத்தி வருகின்றனர். அக்கிராம மக்கள், இதற்காக அந்த கிராமத்தில் உள்ள தச்சு தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து, பொங்கலுக்கு முன்பே காலையில் ஊர் மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் ஏதும் பெறுவதில்லை எனவும், அதற்கு மாறாக நெல், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவற்றை மட்டுமே பெற்றுக் கொள்வதாகவும், இப்பழக்கம் தொடர்ந்து பாரம்பரியமாக முன்னோர்கள் காலத்திலிருந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தச்சு தொழிலாளர் கணபதி கூறுகையில், "பொங்கல் பண்டிகைக்கு முன்பே அகப்பை தயாரிக்கப்பட்டு கிராமங்களில் உள்ள வீடுகளில் பொங்கல் தினத்தன்று பணம் ஏதும் பெறாமல் அகப்பை வழங்குகிறோம். இது பாரம்பரியமாக தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை தினத்தில் மண்பானையில் பொங்கல் வைக்கும் போது, அதில் உள்ள அரிசியை கிளறுவதற்கு அகப்பையை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மண்பானையில் சில்வர் அல்லது பித்தளை கரண்டிகள் பயன்படுத்தினால் பானை உடைந்து விடும், ஆகையால் மரக்குச்சியால் ஆன இந்த அகப்பையை ஆண்டுதோறும் இக்கிராமத்தில் உள்ள சுமார் 300 வீடுகளுக்கும் இலவசமாக தச்சு தொழிலாளர்கள் வழங்கி வருகின்றனர். மேலும், இந்த அகப்பையை வேறு யாருக்கும் பணத்திற்கு விற்பதும் கிடையாது.
இந்த அகப்பை தேங்காய் கொட்டாங்குச்சியினை சுத்தம் செய்து, அதில் மூங்கிலை சீவி இரண்டரை நீளத்தில் கைப்பிடியாக்கி பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் நாகரிகத்தின் வெளிப்பாடாக சில்வர், பித்தளை கரண்டிகளின் வரவால் அகப்பை காணாமல் போனது. வேங்கராயன்குடி கிராம மக்கள் இன்றும் பழமை மாறாமல் பொங்கல் தினத்தன்று மண் அடுப்பில் புதிய மண்பானை வைத்து, அகப்பையின் மூலம் பொங்கலை சமைத்து உணவு உட்கொண்டு வருகின்றனர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு - முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்!