தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்! - vadam

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Thanjavur Periya Kovil
தஞ்சை பெரிய கோயில்

By

Published : May 1, 2023, 10:27 AM IST

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயில் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இவ்விழா கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த சித்திரை திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வந்தது. அதைப்போல் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை பெரிய கோயிலிருந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீநீலோத்பலாம்பாள், ஸ்ரீதியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீகமலாம்பாள் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று தேரடியை வந்தடைந்தது. பின்னர் ஸ்ரீதியாகராஜசுவாமி, கமலாம்பாள் சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டு மங்கல இசைக்கருவிகள் முழங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த திருத்தேரினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் எஸ்பி ஆஷிஸ் ராவத், அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, தஞ்சாவூர் மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த தேரோட்டம் தஞ்சை நகரின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்து தேரடியை வந்தடையும். தேரோட்டத்தை முன்னிட்டு பல இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: AK 62: அஜித்தின் 62-வது படம் 'விடாமுயற்சி' - இயக்குநர் யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details