தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு கொண்டதாக விளங்குகிறது, இத்திருக்கோயில்.
தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து, உபதேசம் செய்து, சுவாமிக்கே நாதன் ஆனதால் இத்தலத்தில் முருகப்பெருமான், சுவாமிநாதசுவாமி என போற்றப்படுவதாக கருதப்படுகிறது. மேலும், இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பெருவிழா 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டின் கார்த்திகை பெருவிழா கடந்த நவ.18ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலையில் படிச்சட்டத்திலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதியுலா நடைபெற்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 9ஆம் நாள் திருக்கார்த்திகை தினமான இன்று (நவ.25) அதிகாலை, மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, சுவாமி முருகனுக்கு தங்கக் கவசம், வைரவேல் அணிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, மூலவர் சுவாமிநாதசுவாமியை நெய் தீபங்கள் ஏற்றியும், அர்ச்சனைகள் செய்தும் தரிசனம் செய்தனர்.