கும்பகோணம் தனியார் விடுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, 'தமிழ்நாடு முழுவதும், ஏற்கெனவே திட்டமிட்டபடி, மத நல்லிணக்கம், சமூக நீதி காக்க, சாதி, மத மோதல்களை தடுத்து நிறுத்திட, மதச்சார்பின்மையை காப்பாற்ற, சமூக அமைதி காக்க, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மனிதச்சங்கிலி வருகிற 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் நடைபெறும்.
மேலும் இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு சமூக அமைப்பினரும் பங்கேற்கின்றனர். இதில் அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு, கடந்த எட்டு ஆண்டுகளில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இனி நிறைவேற்றப் போவதும் இல்லை.
இதனை மறைக்கவும், அவர்களுக்குரிய பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, நாடாளுமன்றத்தில், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, மக்களுக்கு எதிரான பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உட்பட அத்தியாவசியப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.