தஞ்சாவூர்:அதிமுகவில் நிலவும் குழப்பம், உலக நாடுகளிடையே உள்ள குழப்பங்களை விட மிகப்பெரியது எனவும், அக்கூட்டணியிலுள்ள பாஜகவினர் எதிர் சித்தாந்தம் உடையவர்களைக் காட்டிலும், உடன் இருப்பவர்களுக்கே அதிகம் எதிராக செயல்படுவதே நோக்கமாக கொண்டுள்ளனர் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ (Bharat Jodo Yatra) நடைபயணம் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் விதமாக கும்பகோணம் புறவழிச்சாலைப் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவு காங்கிரஸ் கொடிக் கம்பத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (பிப்.5) கொடியேற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற உள்ளதாகவும், தங்களின் கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன், கொள்கை உணர்வுகளுடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், எதிர் அணியில் மாபெரும் குழப்பம் நிலவுவதாகவும், இது உலக நாடுகளின் குழப்பங்களைக் காட்டிலும் மிகப்பெரியது என்றார். இந்த குழப்பங்களுக்கு காரணம் தமிழ்நாடு பாஜக தான் என்றும்; அக்கட்சி, எதிர் சித்தாந்தம் உடையவர்களை காட்டிலும், உடன் இருப்பவர்களுக்கே எதிராக அதிகம் செயல்படுவதேயே தனது சித்தாந்தமாக கொண்டது எனவும் தெரிவித்தார். இதே முறையில் தான், மகாராஷ்டிராவில் இவர்களது கூட்டணி இருந்த சிவசேனாவை 2ஆக உடைத்துப் பின் ஆட்சியை கலைத்து, கலகம் செய்தவர்களையே முதலமைச்சர் ஆக்கினார்கள் என்றும் தெரிவித்தார்.