தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை பெருவுடையாருக்கு 1,000 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம்! - Annabhishekam

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயிலில், பெருவுடையாருக்கு 1,000 கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகளால் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சை பெருவுடையாருக்கு 1000 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம்
தஞ்சை பெருவுடையார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 8:33 AM IST

ஐப்பசி மாத பௌர்ணமி

தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தஞ்சை பெரிய கோயில், பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும். 6 அடி உயரமும் 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், அதன் மேல் 13 அடி உயரம் 23 அடி சுற்றளவு உள்ள லிங்கம் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு ஐப்பசி பெளர்ணமியிலும், நாட்டில் உணவு பஞ்சம் இன்றி பொதுமக்கள் செழிப்புடன் வாழ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னம், 500 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அன்னாபிஷேகத்திற்கு பக்தர்கள் வழங்கிய 1,000 கிலோ அரிசி சாதமாகத் தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது. இதனையடுத்து பூசணிக்காய், வாழைக்காய், வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், பாகற்காய், தர்பூசணி, பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு, வெண்டை, சுரைக்காய், மிளகாய், சோளம், கத்தரிக்காய், மாங்காய், புடலங்காய், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட 500 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

மேலும், சந்திரகிரகணம் என்பதால் பிற்பகல் கோயில் நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, பெருவுடையாருக்கு விபூதி, திரவியப்பொடி, அரிசி மாவுப் பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அன்னாபிஷேகம் தரிசனம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு, அன்னம் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மேலும், ஜீவராசிகள் உண்ணும் வகையில் நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்நிலையில், அன்னாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:ஒடிசாவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்.. வி.கே. பாண்டியனின் டார்கெட் என்ன?

ABOUT THE AUTHOR

...view details