தஞ்சாவூர்:தமிழர்கள் கொண்டாடி மகிழும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு, கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நீர் நிலைகளில் கொண்டாட முடியாத நிலை இருந்தது. இதில் சில ஆண்டுகளில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், இந்த கொண்டாட்டத்தில் உற்சாகம் குறைந்த வண்ணமே இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு இரண்டுமே கைகூடி வந்துள்ளது. ஏனென்றால், மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்டதால், தற்போது கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காவிரி மற்றும் அரசலாற்றங்கரைகளில் ஏராளமானோர் காலை முதல் திரண்டுள்ளனர்.
இவர்கள் வாழை இலை போட்டு, விளக்கேற்றி வைத்து, வெற்றிலை, தேங்காய், பூ, வாழைப்பழம், கொய்யா, மா, பேரிக்காய், நாவற்பழம் உள்ளிட்ட பல்வகை பழங்களுடன், காதோலை கருகமணி, ஊறவைத்த அரிசியில் எள்ளு, வெல்லம் கலந்து வைத்தும், மஞ்சள் கயிறு, தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்தனர்.