தூய்மைப் பணியாளர்களுக்கு அசைவ விருந்தளித்து அசத்திய தனியார் தொண்டு நிறுவனம் தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போடப்பட்ட தற்காலிக கடைகளால் மலை போல் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதனை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அகற்றினர். இதில் ஒரே நாளில் மட்டும் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டன,
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், மாநகராட்சி வாகனங்கள் மூலம் அள்ளப்பட்டு, ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக் கிடங்கு மற்றும் ஆங்காங்கே உள்ள நுண் உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொட்டப்படுவது வழக்கம்.
இந்த வார்டுகளில் தினமும் 95 டன் முதல் 100 டன் வரை குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. அந்த வைகையில் தஞ்சை காந்திஜி சாலை, ஆபிரகாம் பண்டிதர் சாலை, அண்ணா சாலை, கீழவாசல் செல்லும் சாலை, தெற்கலங்கம், தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
மேலும், தரைக்கடைகளும் வழக்கத்தை விட அதிக அளவில் காணப்பட்டன. இதன் மூலம் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வியாபாரிகள் மகிழ்ந்திருந்தாலும், தீபாவளி முடிந்து கடைகள் அகற்றப்பட்டதும் குப்பைகள் மலைபோல் காணப்பட்டன. இதனை அடுத்து, 51 வார்டுகளிலும் கடந்த இரு நாட்களாக குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது.
இந்தப் பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். இந்த நிலையில், தஞ்சையைச் சேர்ந்த ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மைப் பணியாளர்களின் இந்த தொண்டை பாராட்டி கௌரவிக்கத் திட்டமிடப்பட்டது.
அந்த வகையில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை, தஞ்சையில் உள்ள தனியார் உயர்தர ஏசி அசைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சந்தனம், குங்குமம், கற்கண்டு, ரோஜாப்பூ ஆகியவற்றை வழங்கி இன்முகத்துடன் வரவேற்று, அவர்களுக்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி, கோலா ஆகியவற்றை சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்த செயல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் மகாலெட்சுமி மற்றும் பார்வதி ஆகியோர் கூறும்போது, “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சிப் பகுதிகளில் தற்காலிக கடைகளால் போடப்பட்ட குப்பைகள் மற்றும் பொதுமக்கள் வெடி வெடித்ததால் ஏற்பட்ட குப்பைகள் என அதிகளவில் தெருக்களில் கிடந்தன.
இவற்றை கடந்த இரண்டு நாட்களாக சுத்தம் செய்யும் பணியானது தூய்மைப் பணியாளர்களால் நடைபெற்றது. இந்த நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் எங்களது பணியைப் பாராட்டும் வகையில், உயர்தர அசைவ உணவகத்திற்கு வந்து உணவு அருந்தினோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர்கள்.. புதுக்கோட்டையில் இருவர் கைது!