தஞ்சாவூர்: பூதலூர் அருகேவுள்ள களிமேடு கிராமத்தில் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், 94ஆவது ஆண்டாக இந்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. மூன்று நாள்கள் கொண்டாடப்படும் அப்பர் சதய விழா நேற்று (ஏப்.26) தொடங்கியது.
இவ்விழாவின் மிக முக்கியமான நிகழ்வான தேர் திருவிழா நேற்றிரவு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்து பலரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவர் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திக்குழுவுடன் தொலைபேசி வாயிலாக நடந்தவை குறித்து பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “ அப்பர் சாமி கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவைப் போல இந்தாண்டும் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் இந்த தேர் விழாவின்போது அப்பர் சாமியை அலங்கரிக்கப்பட்ட தேரில் இழுத்துச் செல்வது வழக்கம். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய் உடைத்து வழிபடுவது வழக்கான ஒன்று.
இந்தாண்டும் அதேபோல் இரவு 11 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் சாமி படத்தை வைத்து தேர் விழா கொண்டாடப்பட்டது. கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர். பின்னர் அதிகாலை 3 மணியளவில் திரும்பி கோயிலுக்குச் செல்வதற்காக தேரை திருப்பினர். அப்போது, 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியது.
அப்போது, தேரில் இருந்த நான்கு பேரில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இருவர் உயிருடன் இருக்கின்றனர். மேலும், தேரை இழுத்துச் சென்ற சிறுவர்களும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்” என்றார். பொதுவாக தேரானது மரத்தில் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த தேர் முழுக்க முழுக்க இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இது குறித்து ஜீவா கூறுகையில், “தேரில் மின்சாரம் பாய்ந்ததால் தீ பற்றி எரிந்தது. மின்சாரம் பாய்ந்ததில் சிலர் தூக்கி எறியப்பட்டனர். இதனை அங்கு அமர்ந்திருந்த சாமிநாதன் (54 ) என்பவர் கண்ட நிலையில் மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்டிருந்த ஒருவரை மீட்க முயன்றுள்ளார். அப்போது, சாமிநாதன் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் அவரும் உயிரிழந்தார்.
இதையடுத்து மின்கம்பிகளில் சென்ற மின்சாரம் அனைக்கப்பட்டது. பின்னர், உடனடியாக தீயணைப்புத் துறை, அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர், பாதிக்கப்பட்டவர்களை அவசர ஊர்திகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் தேர் விபத்து - என்ன நடந்தது? அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் அவர்களில் இருவர் மட்டும் உயிருக்குப் போராடிய நிலையில் மற்றவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதில், பரணி என்ற 13 வயது சிறுவனும் உயிரிழந்தார்” என்றார். தேர் விழா ஆரம்பித்தில் அதிக கூட்டம் இருந்ததாகவும், அதிகாலை 3 மணி என்பதால் கூட்டத்திலிருந்த பலரும் வீடுகளுக்குச் சென்ற நிலையில் பலரது உயிர்கள் தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தஞ்சாவூர் தேர் விபத்து - குடியரசுத் தலைவர் இரங்கல்!