தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப்-2 தேர்வில் சாதித்த 55 வயது மாற்றுத்திறனாளியின் வைராக்கிய கதை

தஞ்சாவூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரவிச்சந்திரன் என்பவர் 100 நாள் வேலை செய்தபடியே படித்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் (TNPSC Group 2, Preliminary Examination) தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 21, 2022, 5:11 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஆழிவாய்க்கால் கிராமத்தைச்சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரவிச்சந்திரன்(55) நூறு நாள் வேலை செய்து கொண்டே, ஓய்வுநேரத்தில் வயதான சக மூதாட்டி ஒருவரை படிக்கச் சொல்லி, செவிவழி கேட்டு மனப்பாடம் செய்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை (TNPSC Group 2, Preliminary Examination) தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சிபெற்று பலதரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வயதும், ஊனமும் கல்விக்கு எப்போதும் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சாதித்துக்காட்டியுள்ளார், பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி ரவிச்சந்திரன். 1990ஆம் ஆண்டு பி.எஸ்சி கணிதம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில், விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நூறுநாள் வேலை பார்த்துக்கொண்டே அக்கிராம மக்களுக்குப் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் அரசு வேலையில் சேர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்தது. இதற்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடிவு செய்து, குரூப் 2 தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

கோச்சிங் சென்டரில் சென்று படிக்க வசதி கிடையாது. குரூப் 2 தேர்வுக்கான புத்தகம் வாங்கினார். நூறு நாள் வேலையில் ஈடுபட்டுக்கொண்டே, கிடைக்கும் ஓய்வுநேரத்தில் சக தொழிலாளர் பத்மாவதி(65) என்ற 9ஆம் வகுப்பு படித்துள்ள மூதாட்டியிடம் புத்தகத்தைக்கொடுத்து, அவரை சத்தமிட்டு படிக்கச் சொல்லி, அதனை செவி வழியாகக் கேட்டு மனப்பாடம் செய்து, தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

கடந்த மே 21ஆம் தேதி நடந்த குரூப்-2 தேர்வில் உதவியாளர் ஒருவர் உதவியுடன் தேர்வு எழுதினார். இந்நிலையில் இவர் மிகுந்த நம்பிக்கையுடன் முதல்முறையாக குரூப்-2 முதல்நிலைத் தேர்வு எழுதிய நிலையில், தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான அத்தேர்வு முடிவில் ரவிச்சந்திரன் தேர்ச்சிபெற்று விட்டார் என்ற தகவல் அவருக்கு மட்டுமின்றி பல தரப்பினருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக வந்தது. இதன் தொடர்ச்சியாக அவர், அடுத்தபடியாக நடக்க உள்ள முதன்மைத் தேர்வுக்கு (Mains Examination) தயாராகி வருகிறார். அடுத்ததாக நடக்க உள்ள முதன்மைத்தேர்விலும் ரவிச்சந்திரன் வெற்றி பெறுவதற்கு அனைத்துத் தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

100 நாள் வேலைக்கு இடையே படிப்பு..குரூப்-2 தேர்வில் சாதித்த 55 வயது மாற்றுத்திறனாளி!

இதையும் படிங்க: குரூப்-4 தேர்வு - மாற்றுத் திறனாளி மாணவர் ஆர்வமுடன் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details