பெரும்பாலான வயது முதிர்ந்தோர் சாலையோரங்களில் ஆதரவற்று இருப்பதையும், கடைசிக் காலங்களில் கூலி வேலைக்குச் செல்வதையும் நாம் பார்த்திருப்போம். தங்களைப் பாராட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோரைத் தொந்தரவாக நினைக்கும் பிள்ளைகளுக்கு நடுவில் தன்னுடைய பெற்றோருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்திவருகிறார் விவசாயி கருப்பையன்.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள கூப்பிளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த நடேசன், ராஜாமணி தம்பதியினரின் 5 மகன்களில் ஒருவர்தான் கருப்பையன். இவருக்கு பெரமையன், ராஜாக்கண்ணு, மாரிமுத்து, சவுந்தர்ராஜன் ஆகிய 4 சகோதர்கள் உள்ளனர். செல்வச் செழிப்போடு பிள்ளைகளை வளர்க்கவில்லையென்றாலும், கருப்பையனின் பெற்றோர் அன்பை அள்ளிக் கொடுத்துள்ளனர்.
கடைக்குட்டியான கருப்பையன் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்டார். பின்னர் ராஜாமணி தந்தையில்லாக் குறை போக்கும் வண்ணம் பிள்ளைகளை வளர்த்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ராஜாமணியும் இவ்வுலகைவிட்டு பிரிந்தார். தாயும், தந்தையும் தன்னைவிட்டு அகன்றாலும் அவர்களின் நினைவு கருப்பையனின் இதயத்தைவிட்டு நீங்கவில்லை.