தஞ்சாவூர்:உலகையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் சிக்கி 94 அப்பாவி பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 குழந்தைகள் படுகாயமுற்று இன்றளவும் மாறா வடுவுடன் வாழ்ந்து வருகின்றனர். இன்று (ஜுலை 16) இவ்விபத்தின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு சம்பவம் நடந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு இன்று காலை முதல் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் தனித்தனியாக வந்து குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு பண்டங்களான பிஸ்கெட், குளிர்பானங்கள், சாக்லேட், பழங்கள், இதர இனிப்பு வகைகள் ஆகியவற்றை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் மாலை வைத்தும் உதிரி மலர்கள் தூவியும் கண்ணீர் மல்க தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் உள்பட பல காவல் துறையினர் இணைந்து சம்பவம் நடந்த பள்ளி முன்பு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே சரவணன், துணை மேயர் தமிழழகன், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் இணைந்து பாலக்கரையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்து மலர் வளையம் வைத்தும் மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் மரியாதை செலுத்தினர்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கொறடா கோவி செழியன், “பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பள்ளி தீ விபத்து நடந்த ஜுலை 16ஆம் நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து, உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என்பதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற முயற்சி செய்வேன்” என்றார். தொடர்ந்து அனைத்து கட்சி பிரமுகர்களும் அங்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க:தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை