தென்காசி:கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவாரமாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பெண்கள் தங்களின் மாங்கல்ய பலத்திற்காகவும் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்றவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வர்.
அந்த நாள்ல் தென்காசி மாவட்டம் தென்பொதிகை மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் குற்றாலத்தில் ஆயிரக்கணக்கில் பெண்கள் வந்து வழிபட்டு செல்வர்.
இந்நிலையில், கார்த்திகை மாத சோமவார வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவியில் ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலையிலேயே புனித நீராட கூடினர்.
அருவியில் புனித நீராடிய பெண்கள் குற்றாலநாதர் கோயிலில் உள்ள செண்பக விநாயகர் சன்னதிக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். அங்குள்ள நாகசிலைகளுக்கு மஞ்சள் பொடி பூசி பால், பழம் வைத்து வழிபாடு நடத்தினர். சோமவாரத்தில் நீர்நிலைகளில் நீராடி அருகில் உள்ள விநாயகர் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்தினால் கணவருக்கு நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை மாத சோமவாரம்; குற்றால மெயின் அருவியில் குவிந்த சுமங்கலி பெண்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் மேலும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதனால் தான் குற்றாலத்தில் சோமவாரம் அன்று அருவியில் பெண்கள் புனித நீராடி செண்பக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செஞ்சி அருகே கோயில் பிரச்னை... இரு பிரிவினரிடையே மோதல்: போலீசார் குவிப்பு!