தென்காசி:சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பேரூராட்சியில் ரூ.5 கோடியே 66 லட்சம் திட்ட மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கலந்து கொண்டார்.
மேலும், இதனையடுத்து திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் 'நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி' நடைபெற்றது. இதனை வைகோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா கலவரம் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக இருப்பதால், அவர்களை காலி செய்யும் நோக்கில் கலவரம் செய்ய நினைக்கிறது. பதிலுக்கு பதில் கலவரம் என்ற வகையில் அமைந்தால் அது தமிழகத்துக்கு நன்றாக இருக்காது. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை, கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனை மீறி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காததை கண்டிக்கிறேன்” என்று கூறினார்.