தென்காசி: கடையநல்லூர் அருகே வேலப்ப நாடாரூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன். இவர் சேர்ந்தமரத்தில் அச்சிடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவ.01 ஆம் தேதி அன்று தனது சொந்த காரில் அவரது மாமா செல்லப்பா என்பவருடன் வேலை நிமித்தமாக நாகர்கோவில் சென்றுள்ளார்.
அன்று மாலை 6 மணிக்கு ஹெல்மெட் அணியவில்லை என இவருக்கு இ-செலான்- லிருந்து அவரது அலைபேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இ-செல்லான் என்பது குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கேமராவில் பதிவாகும் காட்சிகளை அடிப்படையாக வைத்துக் காவல் துறை தரப்பில் விதிகளை மீறிய வாகனங்களுக்குத் தானாக எலக்ட்ரானிக் முறையில் அபராதம் விதிக்கப்படும் முறையாகும்.
இந்த முறையில் தான் காரில் சென்ற சுரேஷ் கண்ணனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. தென்காசி காவல் சோதனை சாவடி பகுதியில் இவரது நான்கு சக்கர வாகனமான காருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிட்டும் இருந்துள்ளது. காரில் சென்ற இவருக்கு ஹெல்மெட் போடவில்லை என இ- செல்லான் அனுப்பப்பட்டுள்ளதைப் பார்த்துப் அதிர்ந்த சுரேஷ் கண்ணன், உடனடியாகத் தனக்குத் தெரிந்த தனியார் ஓட்டுநர் பயிற்சி மைய நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.
அப்போது அவர்களின் உதவியுடன் போக்குவரத்துத் துறையினரால் தொடங்கப்பட்ட இணையதளத்தில் பரிசோதித்துள்ளனர். இணையதளத்தில், சுரேஷ் கண்ணனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் இது குறித்து சுரேஷ் கண்ணன் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து சுரேஷ் கண்ணன் கூறுகையில், "நான்கு சக்கர வாகனத்திற்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்தது எனக்கு வினோதமாக உள்ளது" என்றுக் கூறினார்.
இதையும் படிங்க:ரஜினி, விஜய்க்கு தேவைப்படும் போது எனக்கு தேவைப்படாதா? - இயக்குநர் அமீர் கேள்வி!